கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் முழப்பிலங்ஙாடு பகுதியை சேர்ந்தவர் நௌஷாத் மற்றும் நுசீபா தம்பதி.நௌஷாத் பஹ்ரைனில் பணியாற்றி வரும் நிலையில் அவரின் மனைவி நுசீபா மற்றும் அவரது 10 வயதான மகன் நிஹால் ஆகியோர் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். சிறிதளவு மனம் குன்றியும், வாய்பேச முடியாத நிலையிலும் இருந்த சிறுவன் நிஹால் நேற்று மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து விளையாடுவதற்காக வெளியே வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் குழந்தையை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் நுசீபா மற்றும் அக்கம் பக்கத்தினர் நிஹாலை தேடிச்சென்றுள்ளனர்.
நிஹால் அடிக்கடி காணாமல் போவதும் தேடி கண்டு பிடிப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. இதனால் பெரிதும் அச்சம் இல்லாமல் குழந்தையை தேடி உள்ளனர். இந்நிலையில் நிஹாலின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் தெரு நாய்கள் கூட்டமாக வருவதை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பார்த்துள்ளார். இதனை அடுத்து நாய்கள் வந்த திசையை நோக்கி சென்ற அந்த நபர் யாரும் இல்லாத வீடு ஒன்று இருப்பதை கண்டு அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு சிறுவன் நிஹால் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு சென்ற உள்ளூர் வாசிகள் மற்றும் நிஹாலின் உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உடல் முழுவதும் நாய்கள் கடித்து குதறியதில் நிஹால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், "தங்கள் ஊரில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும், வாய் பேச முடியாத நிஹாலால் நாய்கள் கடிக்கும்போது கத்தி கூச்சலிட முடியாத நிலையில் பரிதாபமாக தாக்கப்பட்டுள்ளார் எனவும் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டார்". இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகே எத்தனை நாய்கள் நிஹாலை கடித்துள்ளது என்ற தகவல் தெரிய வரும் எனக்கூறப்படுகிறது. மேலும் இன்று மதியம் நிஹாலின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் அந்த ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து ஊர் மக்கள் கூறுகையில் "தெரு நாய்களின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி என அனைத்தையும் நாய்கள் கடித்துக் கொன்று விடுவதாகவும் புகார் அளித்துள்ளனர். இதையெல்லாம் தாண்டி நாய்கள் தற்போது வாய் பேச முடியாத சிறுவனையும் கொன்று வேட்டையாடியுள்ளது என வேதனை தெருவித்தனர். மேலும், கிராமப்புறம் மட்டுமின்றி நகர்புறங்களிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், அரசால் திறக்கப்பட்ட நாய் கருத்தடை மையங்கள் பயனற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த சூழலில் குழந்தைகளை பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல தேவைகளுக்காக எப்படி வெளியே அனுப்புவது என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்". கேரளாவில் அடிக்கடி இதுபோன்று தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் இறக்கும் சம்பவம் நிகழ்ந்து வரும் நிலையில் நிஹாலின் உயிரிழப்பும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது, இதற்கு என்னதான் தீர்வு என்ற வேதனை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பேய்கள் நடமாட்டத்தை விசாரித்த காவல் அதிகாரி சஸ்பெண்ட்: கொள்ளை வழக்கில் நடவடிக்கை