ஹைதராபாத்: நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ஆகும். பொதுவாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும்.
அந்த வகையில், அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இதனால் ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதமும் எகிறியுள்ளது. இதனால் வீட்டுக்கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் விழிபிதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இஎம்ஐ பிரச்னையில் இருந்து மீண்டு வருவது சாத்தியமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
கடனை முன்கூட்டியே செலுத்தலாம்: ரெப்போ அடிப்படையில் கடந்த ஆண்டு 6.5 சதவீத கணக்கில் வாங்கப்பட்ட வீட்டுக்கடன், தற்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது,20 ஆண்டுகளில் முடிய வேண்டிய வீட்டுக்கடன் காலம், 30 ஆண்டை தாண்டுகிறது. மாதாந்திர வட்டியும் அதிகரித்துள்ளது. வாங்கிய கடனுக்கான பணத்தை, சற்று முன்கூட்டியே செலுத்தினால் இந்த சுமையில் இருந்து விடுபடலாம்.
இஎம்ஐ-யை அதிகரிக்கலாம்: உங்கள் ஆண்டு வருமானம் உயரும் போது மாதாந்திர வட்டித் தொகையை ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தி கட்டலாம். இது உங்களது கடனுக்கான காலத்தை சில ஆண்டுகள் வரை குறைக்கும். அதாவது நீங்கள் செலுத்தும் ஒரு இஎம்ஐ-யாவது, கடனின் அசல் தொகையை கழிக்கும்படி இருக்க வேண்டும். உங்களது இஎம்ஐ ரூ.25,000 என்று வைத்துக் கொண்டால், நீங்கள் ரூ.30,000-ஐ செலுத்த வேண்டும். இதனால் கடனுக்கான வட்டி சுமை வெகுவாக குறையும்.
அசல் தொகையில் கவனம்: கடனுக்கான வட்டித் தொகையை அதிகரிக்க சிரமம் ஏற்படுபவர்கள், ஒவ்வொரு ஆண்டும் அசல் தொகையில் 5 சதவீதத்தை செலுத்த முயற்சிக்கலாம். இதன் மூலம் 20 ஆண்டு கடனை 12 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வாய்ப்புள்ளது. மொத்த கடன் தொகையில் 66 சதவீதத்தை இஎம்ஐ மூலமாகவும், மீதமுள்ள தொகையை முன்கூட்டியே செலுத்திக் கொள்ளலாம்.
அவகாசத்தை குறைக்க வேண்டும்: வீட்டுக்கடனை வாங்க செல்லும் முன், அதை எத்தனை ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை முறையாக தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வீட்டுக்கடனுக்கான காலம் 20 ஆண்டுகள் என்றால், அதை 10 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏனென்றால், வட்டி விகிதம் உயரும் போது, வீட்டுக்கடனுக்கான காலம் 25 ஆண்டுகளாக உயர்ந்துவிடும். முன்கூட்டியே கடனை செலுத்தினால், வீட்டுக்கடனுக்கான காலம் உயராமல் தடுக்க முடியும்.
இதையும் படிங்க: இளைஞர்களை குறிவைக்கும் கடன் வழங்கும் செயலிகள்.. தப்பிக்க வழிகள் என்ன?