கவுசாம்பி: உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பியை சேர்ந்த 17 வயது மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். ஹோலி பண்டிகைக்கு முன்பாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை மாணவி எழுதி உள்ளார். தேர்வு எழுதியது முதல் மாணவி பல்வேறு நெருக்கடிகளுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டின் யாரும் இல்லாத நேரம் பார்த்து மாணவி தற்கொலைக்கு முயன்று உள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை கண்ட உறவினர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
மேலும், மாணவியின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதை கண்டித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் சண்டையிட்ட மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவியின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் மாணவியின் சடலத்தை கொண்டு ஆம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகமும், போலீசாரும் ஏற்படுத்தித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து தன் தங்கையில் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிய இளைஞர், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமந்து கொண்டு வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து மாணவியின் வீட்டிற்கு விரைந்த போலீசார, மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவி 12ஆம் வகுப்பு தேர்வை சரிவர எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த அச்சத்துடன் இருந்து உள்ளார். மேலும் வீட்டில் இருப்பவர்களிடம் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்பதை கூற முடியாமல் தவித்த மாணவி இந்த துயர முடிவை எடுத்து உள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நல்லா தூங்குனீங்களா..! இன்று உலக தூக்க தினம்!