அகமதாபாத்: சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கரோனா பி.எஃப். 7 திரிபு வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் மாறுபாடு கரோனா பி.ஏ. 5.2 மற்றும் பி.எஃப். 7 கரோனா வகைகள், முன்பு பரவிய ஒமைக்ரான் பி.ஏ.5 வகையின் துணை திரிபு என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது கண்டறியப்பட்டுள்ள பி.ஏ.5.2 மற்றும் பி.எஃப் 7 வகை திரிபுகள் கரோனா மாறுபாடுகளிலே மிக மோசமானது என்றும்; தீவிர பரவும் தன்மை கொண்டது என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் அதிகளவில் பரவும் திறன் கொண்டது என்றும் மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் கரோனா பி.எஃப். 7 ஒமைக்ரான் மாறுபாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா.. மத்திய அரசு அவசர கடிதம்!