தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பிரச்சினையால் ஒரே சமூகத்தின் இருதரப்பினரிடையே அறிக்கைப்போர் ஏற்பட்டுள்ளது. மெர்க்கன்டைல் வங்கி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அவ்வாறு பட்டியலிடப்பட்டால் நாடார் சமூகத்திற்கான உரிமை கைவிட்டுப் போய்விடும் என்கிறது ஒரு தரப்பு, ஆனால் பட்டியலிடப்பட்டால் தான் வங்கி நியாயமான வளர்ச்சியை அடையும் என்கிறது மற்றொரு தரப்பு.
வங்கி விவகாரத்தில் தற்போதைய பிரச்சினைக்கு என்ன காரணம்.. வரலாற்றிலிருந்து, அதன் காரணத்தை அலசலாம்.
நாடார் வங்கியாக தொடக்கம்: 1921ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நாடார் வங்கியாக தொடங்கப்பட்டு 1962இல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றம் பெற்றது. பெயரில் தான் நாடார்கள் இல்லையே தவிர , நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே இருந்தது. தூத்துக்குடி சிவகாசி, விருதுநகர் நாடார்களே வங்கி நிர்வாகத்தை கவனித்து வந்தனர்.
பங்குகளை வாங்கி குவித்த எஸ்ஸார் குழுமம்: வங்கி நிர்வாகம் இவ்வாறு சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், தொன்னூறுகளில் வங்கி வரலாற்றில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. 1994ஆம் ஆண்டு எஸ்ஸார் குழுமம் , நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசி பங்குகளை வாங்கத் தொடங்குகிறது.
1921இல் வங்கி தொடங்கப்பட்ட போது சில லட்சங்கள் மூதலீடாக இருந்தது. பலநூறு கோடிகளாக வளர்ச்சி கண்டிருந்தது. பங்கு விற்பனையில் நல்ல லாபம் கிடைத்த நிலையில், ஆர்வத்துடன் விற்ற முதலீட்டாளர்களிடமிருந்து சிறுகச்சிறுக 67 சதவீத பங்குகளை வாங்கி அதிரச் செய்தது எஸ்ஸார் நிறுவனம்.
பின்னர் எஸ்ஸார் நிறுவனத்திடமிருந்து பங்குகள் ஸ்டெர்லிங் குழுமத்தின் கைகளுக்கு சென்றன. ஆனால் இந்த பங்கு பரிமாற்றத்தை ரிசர்வ் வங்கி அனுமதிக்காததால் பங்கு மாற்றம் முடக்கத்தை சந்தித்தது.
வங்கியை மீட்கும் முயற்சி: வங்கி தங்கள் கையை விட்டு நழுவுவதை தாமதமாக புரிந்து கொண்ட நாடார் சமூகத்தினர், பின்னர் விழித்துக் கொண்டு வங்கி மீட்பு குழு ஒன்றை துவக்கினர்.
நாடார் மகாஜன வங்கி மூதலீட்டாளர்கள் மன்றம் என்ற அமைப்பு இழந்த வங்கி பங்குகளை மீண்டும் வாங்கி நாடார் முதலீட்டாளர்கள் வசம் ஒப்படைப்பதற்காக தொடங்கப்பட்டது. இந்த மூதலீட்டாளர் மன்றத்தின் அறங்காவலர்களாக சுமார் 30 பேர் இடம்பெற்றனர்.
இந்த மன்றம் ஒரு வழியாக ஸ்டெர்லிங் குழுமத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியது. அதன்படி அந்த குழுமத்திடமிருந்த 1 லட்சத்து 91 ஆயிரம் பங்குகளிலிருந்து , 96 ஆயிரம் பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. அப்போது வங்கியின் இயக்குநர்களாக இருந்த ராமச்சந்திர ஆதித்தன், எம்.ஜி.எம். மாறன் ஆகியோர் இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றனர்.
கண்ணன் ஆதித்தனின் விளக்கம்: ராமச்சந்திர ஆதித்தனாரின் மகனான கண்ணன் ஆதித்தன், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்குகளை ஸ்டெர்லிங் குரூப்பிடம் இருந்து வாங்க ரூ.155 கோடியில் ஒப்பந்தம் ஒன்றை முதலீட்டாளர்கள் மன்றம் 24.6.1999 அன்று கையெழுத்திடுகிறது.
ஆனால் ரூ.100.75 கோடி மட்டுமே நாடார்களிடம் திரட்ட முடிகிறது. அதிலும் ஒரு சிலர் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் கடைசியில் ரூ.80.75 கோடி மட்டுமே மிஞ்சுகிறது. 1,91,455 பங்குகளில் 96,000 பங்குகள் மட்டும் பணம் கொடுத்தவர்கள் பெயரில் மாற்றப்படுகிறது.
அதாவது 25 ஆயிரம் நாடார்கள் பெயர்களில் 96 ஆயிரம் பங்குகள் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ஸ்டர்லிங் நிறுவனத்திடம் மீதமுள்ள 33.43 சதவீத பங்குகள் இருந்தன. அனைத்து நாடார்களுக்கும் பங்குகள் வாங்க வாய்ப்பு கொடுத்து யாரும் வாங்க முன்வராத நேரத்தில்தான் பா.ராமச்சந்திர ஆதித்தன் வங்கி முதலீட்டாளர்கள் மன்றத்தின் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மூலதனம் செய்வதற்காக மட்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் பங்குகளை விற்க முடிவு செய்தார்.
எனவே, ஆர்.பி.ஐ.யிடம் அனுமதி பெற்று ஸ்டெர்லிங் குழுமத்திடம் மீதமுள்ள பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 46,862 பங்குகளும், மீதமுள்ள 20,204 பங்குகள் நாடார்களிடமும் விற்கப்பட்டதாகவும் கண்ணன் ஆதித்தன் விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையே வங்கி நிர்வாகத்தின் நலனுக்கு எதிரானது என்பது கரிக்கோல்ராஜின் வாதமாக உள்ளது.
ஐ.பி.ஓ. நாடார்களின் உரிமையை பாதிக்குமா?: நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், பொருளாளராகவும் யார் இருக்கிறார்களோ அவர்கள் முதலீட்டாளர்கள் மன்றத்தின் அறங்காவலர்களாக இருப்பார்கள். இந்த வகையில்தான் கரிக்கோல்ராஜ் அறங்காவலர் ஆனார். எனவே தனிப்பட்ட பரிவர்த்தனைகளில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்கிறார் கண்ணன் ஆதித்தன்.
மெர்க்கன்டைல் வங்கி பொது பங்கு விற்பனைக்கு வந்தால் வங்கியின் கட்டுப்பாடு, நாடார்களை விட்டுப் போய்விடும் என்கிறார், கண்ணன் ஆதித்தன். ஆனால் பொது பங்கு வெளியிட்டதால்தான் தற்போது இருக்கும் முதலீட்டாளர்களையாவது காப்பாற்ற முடியும் என்பது எதிர்தரப்பின் வாதமாக உள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொது பங்கு வெளியீடும் இரு தரப்பு கருத்து மாறுபாடுகளால் தாமதமாகி வருகிறது. முதலீட்டாளர்களின் நலனையும் சமூக மக்களின் நோக்கத்தையும் பாதுகாக்கும் வகையிலான தீர்வு விரைவில் எட்டப்படும் என்றே எதிர்பார்க்கலாம்.