உத்தராகண்ட்: உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரியை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து இன்று (ஆகஸ்ட் 20) கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கங்னானி அருகே பள்ளதாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பயணிகள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். மேலும், 27 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து, அம்மாநில பேரிடர் மீட்புப் படை தலைவர், மணிகாந்த் மிஸ்ரா, "பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்தில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து செல்லபட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: எரிபொருள் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் - பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து.. 16 பேர் பலி!
பின்னர், மீட்பு பணியில் ஈடுபட்ட காவலர் குல்தீப், அளித்த தகவலின் படி, “இந்த பேருந்து குஜராத் மாநிலத்தில் இருந்து வந்துள்ளது. இப்பேருந்தில் சுமார் 33 பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து கங்கேத்ரி தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 27 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
இந்நிலையில் உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, கங்கோத்ரி நெடுஞ்சாலையில் கங்னானியில் நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு, கூடுதல் தலைமைச் செயலர் ராதா ரதுரிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், உத்தரகாசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான பிரேம்சந்த் அகர்வாலையும் நிலைமையை மேற்பார்வையிடுமாறும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
பேருந்து விபத்து குறித்து காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி சிறுமி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை - அதிகாரி மீது போக்சோ வழக்கு!