ஹர்தா (மத்தியப் பிரதேசம்): இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மாபெரும் நாயகனும், தேசத் தந்தையுமான மகாத்மா காந்தி, தனது சத்தியம், அகிம்சை கொள்கைகளின் அடிப்படையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். இந்திய விடுதலையில் முக்கியப் பங்காற்றிய அவரின் ஈடு இணையற்ற செயல்களால் ஈர்க்கப்பட்ட நாட்டு மக்களில் மத்தியப் பிரதேசம் ஹர்தாவில் உள்ள குடும்பங்களில் சோகல்ஸ் குடும்பமும் ஒன்று.
இந்தக் குடும்பத்தில் மறைந்த விடுதலை வீரர்கள் சம்பலால் சங்கர் சோகல், அவரது தந்தை துளசிராம் சோகல் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். ஹர்தாவில் பல குடும்பங்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், காந்திஜியுடன் நெருக்கத்தில் இருந்தது சோகல் குடும்பம். இதுவே நாட்டு மக்களிடம் இவர்களைப் பிரபலப்படுத்தியது. 1933 டிசம்பர் 8 அன்று காந்திஜியின் வருகையின்போது ஹர்தாவில் வசிப்பவர்கள் பெரும் நன்கொடை அளித்தனர்.
இதில் சோகால் குடும்பமும் ஒன்று. இது இவர்களுக்கு இன்றளவும் போற்றுதலை அளித்துவருகிறது. 80 மற்றும் 90 வயதுகளில் இருக்கும் அவரது மகள்கள், ஹரிஜன நலனுக்கான பரப்புரையின் ஒரு பகுதியாக காந்திஜி அவர்கள் இடத்திற்குச் சென்றதை நினைவுகூருகின்றனர்.
ஹர்தா பகுதிக்குச் சென்ற காந்திஜியை அவ்வூர் மக்கள் மனதார வரவேற்றனர். அத்துடன் அவருக்கு ஒரு பை நிறைய பணத்தை அளித்தனர். அந்தப் பையில் ஆயிரத்து 633 ரூபாய் 15 அணா இருந்தது.
இது அந்தக் காலத்தில் மிகப்பெரிய தொகை ஆகும். இந்தத் தொகை மட்டுமின்றி காந்திக்கு வெள்ளித் தட்டு ஒன்றும் பரிசளிக்கப்பட்டது. பின்னர் இது ஏலம்விடப்பட்டது. அந்த ஏலத்தில் சோகாலின் குடும்பத்தைச் சேர்ந்த துளசிராம் சோகல் என்பவர் 101 ரூபாய்க்கு வாங்கினார்.
அந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தி பூ மழையில் நனைந்தார் என்றே கூறலாம். ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று மகாத்மா காந்தியைப் பூக்கள் தூவி வரவேற்றனர்.
அதேநேரம் அனைவரும் கட்டுக்கோப்புடன், பொறுமை கலந்த ஒழுக்கத்துடன் வரிசையாக நின்றனர். இதைப் பார்த்து மகிழ்ந்த அண்ணல், ஹர்தாவை இதய நகரம் என்று வர்ணித்தார்.
சோகல் சகோதரிகளின் இந்தக் கேள்விப்படாத கதை, அவர்களின் நினைவுகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஹர்தா என்ற சிறிய நகரத்தில் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளன. காந்தியடிகள் கூறியதுபோல் இதய நகரம் அவர்களின் நினைவுகளால் துடிக்கின்றது.
இதையும் படிங்க : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்- ரொட்டித் துண்டு மர்மங்கள்!