டெல்லி: நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பலர் முன்னிலையில் நாளை (மே 28) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள் அமைச்சர்கள் மற்றும் மற்ற ஆதீன சுவாமிகள் முன்னிலையில் புனித செங்கோலை மதுரையின் 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், ஆதீன செங்கோல் குறித்து பல கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆதீன சுவாமிகள் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.
மேலும், புதிதாக திறக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் ஆதீனத்தின் செங்கோலை சபாநாயகர் பின் இருக்கையில் வைக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்குபெற ஆதீன சுவாமிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட ஆதீன சுவாமிகள் டெல்லி செல்ல இருப்பதாக அறிவித்தனர். முன்னதாக, செங்கோல் குறித்து பலர் பொய்யான தகவலை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது என்று திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்த செங்கோல், திருவாடுதுறை ஆதீனத்தின் மூலமாக 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆட்சி முடிவை குறிக்கும் வகையிலும் இந்தியா சுதந்திரம் அடைந்ததை சுட்டிக்காட்டும் வகையிலும் ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்டது. 75ஆண்டுகளாக அலாகபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த செங்கோல் தற்போது மீண்டும் உயிர்ப் பெற்றுள்ளது. இது தமிழநாட்டிற்கு மட்டுமின்றி தமிழர்கள் அனைவருக்கும் கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 ஆதீன சுவாமிகள் நாளை திறக்கவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் பங்குபெற டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தருமபுர ஆதீனம், பழனி ஆதீனம், விருத்தாசலம் ஆதீனம், திருக்கோயிலூர் ஆதீனம் என அனைத்து ஆதீன சுவாமிகள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும், திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வரலாறு சிறப்புமிக்க புனித செங்கோலை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செங்கோல் சிறந்த எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் தரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “புனித தன்மைக் கொண்ட இந்த செங்கோல், பெரும் மதிப்புமிக்க வரலாற்றை கொண்டுள்ளது. இது பெரும்பாலும் சிறந்த ஆட்சி மாற்றத்தையே குறிக்கின்றது” என அதன் பெருமையை சிறப்பித்து கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆதீனத்தின் செங்கோல் அமைந்துள்ளது. இது தமிழர்களுடைய பெருமை, மரபு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரைசாற்றும் விதமாக அமைய உள்ளது எனத் தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திரத்தின் நினைவாக ஜனநாயகத்தின் சின்னமாக திகழப்போகும் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு தமிழ்நாடு மக்கள் சார்பில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமருக்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Sengol: சோழர்களின் சொத்தா?. பாண்டியர்களின் கலை நயமா?.. தென்காசியில் ஒரு செங்கோல்