அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதில் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்றது.
அப்போது, திமா ஹாசோ தொகுதிக்குள்பட்ட ஹப்லாங் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் பெரும் குளறுபடி நடந்தது தெரியவந்துள்ளது. ஹப்லாங் தொகுதிக்குள்பட்ட 107(A) கோட்லிர் எல்.பி பள்ளி வாக்குச்சாவடியில் மொத்தமே 90 வாக்காளர்கள்தான் இருக்கின்றனர்.
ஆனால்,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவ்விவகாரத்தின் காரணமாக, வாக்குச்சாவடியில் பணியிலிருந்த 5 தேர்தல் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்தார். மேலும், அங்கு மறு வாக்குப்பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், வாக்குப்பதிவின்போது அங்கு வந்த கிராமத் தலைவர் ஒருவர் புதிய வாக்காளர் பட்டியலுடன் வந்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், ஊர் தலைவரின் பேச்சை தேர்தல் அலுவலர்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது. தேர்தல் நடந்தபோது பாதுகாப்பு அலுவலர்கள் பணியில் இருந்தார்களா? இதன் பின்னால் வேறு யாராவது இருக்கின்றனரா என்பது குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரள தேர்தல்: மெட்ரோ மேன் ஸ்ரீதரன் வாக்கு செலுத்தினார்