டெல்லி: பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் பெண் காவலர்களின் எண்ணிக்கை 16 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போதுவரை நாடு முழுவதும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 504 பெண் காவலர்கள் உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஆய்வின் முடிவில், மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 696 பெண் காவலர்கள் இருந்தனர்.
இந்த இரண்டு கால இடைவெளியில் காவல் துறையில் இணைந்த பெண் அலுவலர்களின் எண்ணிக்கை 16 விழுக்காடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நாடு முழுவதும் உள்ள காவலர்களில் 10.30 விழுக்காடு மட்டுமே பெண் காவலர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 29 ஆயிரத்து 112 பெண் காவலர்கள் பணிபுரிகின்றனர். மொத்தமாக 3 லட்சத்து 3 ஆயிரத்து 450 காவலர்கள் அம்மாநிலத்தில் பணியில் உள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு காவல் துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதமாக உயர்த்தி அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ஐபிஎஸ் பிராகாஷ் சிங், " ஆண்டுதோறும், பெண் காலவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதுவரை மத்திய ஆயுத காவல் படையில் 29 ஆயிரத்து 249 பெண் காவலர்கள் உள்ளனர். தேசிய புலனாய்வு முகமையில் 37 பெண் அலுவலர்களும், சிபிஐயில் 475 பெண் அலுவலர்களும் உள்ளனர் " என்றார்.
இதையும் படிங்க: புதிய ஐஐஎம் கல்வி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!