ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வந்த 'ஹுரியத் மாநாடு கூட்டமைப்பு', காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வலுவிழந்துவிட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த அமைப்பின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து வருவதாக என்ஐஏ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) அமைப்பினர் மற்றும் முன்னாள் பயங்கரவாதிகள் ஶ்ரீநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பயங்கரவாதிகள், தடை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி மற்றும் ஹுரியத் கூட்டமைப்புக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக சதித்திட்டம் தீட்டியதாகத் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் பயங்கரவாதிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்த குழுவினரின் வழிகாட்டுதல்படியே ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி மற்றும் ஹுரியத் கூட்டமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், அதில், ஏராளமான பிரிவினைவாதிகள் கலந்து கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பத்து பேர் கைதான நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பை, பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்தது. குறிப்பாக, புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: Manipur violence: தொடரும் வன்முறை.. மீளா துயரம்... துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!