விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளம் பகுதியில் நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இங்கு முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, சங்கு வளையல் வியாபாரமும் நடந்துள்ளது. மேலும், அலங்காரப் பொருட்களிலும் முன்னோர்களுக்கு ஆர்வம் இருந்ததற்குச் சான்றாக, சுடுமண் மணி, அலங்கரிக்கப்பட்ட காதணி ஆகியவை கிடைத்துள்ளது எனவும் அகழாய்வு இயக்குனர் தெரிவித்தார்.