ஏற்காடு வனவிலங்குகளைக் காக்க தண்ணீர் தொட்டி வைத்த தன்னார்வலர்கள்! - water tank to protect wildlife
🎬 Watch Now: Feature Video
Published : Apr 28, 2024, 8:10 PM IST
சேலம்: புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதியில் ஏராளமான குரங்குகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதியில் கோடை கால வெயிலின் தாக்கம் அதிகளவில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் காய்ந்து, வறட்சி ஏற்பட்டுள்ளது. மழையும் இல்லாததால் ஏற்காடு மலை ஓடைகள் வறண்டு போய் காணப்படுகிறது. இதனால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி சாலைக்கு வரும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதனால் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக சேலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை சார்பில், ஏற்காடு மலைப்பாதையில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டன. தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்களிப்போடு, மலைப்பாதையில் தெற்கு வடக்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் மொத்தம் 50 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டன.
கோடை காலம் முடியும் வரை இந்த தொட்டிகளைப் பராமரித்து தண்ணீர் நிரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய தன்னார்வலர்கள், அதற்குப் பதிலாக மலைப்பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பிட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும், வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் வீசி எறிவதைத் தவிர்த்து, வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.வி.எஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் இராஜவிநாயகம், வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன், தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் செவ்வை அன்புக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.