கிராமங்களைச் சூழும் தண்ணீர்.. தத்தளிக்கும் திட்டு கிராமங்கள்.. மயிலாடுதுறையில் மீட்புப் பணிகள் தீவிரம்! - VILLAGES FLOODED IN MAYILADUTHURAI
🎬 Watch Now: Feature Video
Published : Aug 3, 2024, 9:20 PM IST
மயிலாடுதுறை: கர்நாடக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, உபரி நீர் முழுவதும் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. மேலும், மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியதன் காரணமாக உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றின் வழியே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், வெளியேற்றப்படும் நீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று, பழையாறு அருகே வங்கக் கடலில் கலந்து வருகிறது. இன்று காலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 2 லட்சம் கன அடி செல்கிறது.
இதன் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நாதல் படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கிராமங்களின் சாலைகளைக் கடந்து வெள்ளநீர் செல்வதால் நாதல் படுகை மற்றும் முதலை மேடு திட்டு கிராமங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் அதிகரிக்கும் என்பதால் தீயணைப்புத்துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்.
வெள்ள நீரின் அளவு அதிகரிப்பதால் கிராமங்களை விட்டு வெளியேறும் கிராம மக்களை பாதுகாப்பாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு வருகின்றனர். நீரின் அளவு உயர்ந்தால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களை வெளியேற்ற பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படுகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.