'அடடா மழைடா அட மழைடா..' கோவையில் மேம்பாலத்தில் அருவி போல கொட்டிய மழைநீர்! - Rainfall in Coimbatore
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சமீப நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், கோவையில் மேம்பாலத்தில் இருந்து கொட்டிய மழைநீர் அருவி போல கொட்டிய காட்சியும், வாகன ஓட்டிகள் அவற்றில் நனைந்த படி சென்ற காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கோவை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கோவையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கதொடங்கியது. இதனால், கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம் பகுதியில் மழைநீர் தேங்கிய நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றிய பின்னர் ஓரளவுக்கு போக்குவரத்து சீரானது. ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தில் நீர் தேங்கி ஆங்காங்கே அருவி போல் மழைநீர் கொட்டியது.
இதில், இருசக்கர வாகன ஓட்டிகள் நின்று ரசித்தும், அதில் நனைந்தும் சென்றனர். மேலும் கார்களில் சென்றவர்களும் கார்களை பாலத்தின் கீழ் நிறுத்தி மழையை ரசித்தபடி சென்றனர். இதனை சக வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.