ஏலகிரி சக்தி காளியம்மன் கோயில் திருவிழா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - sakthi amman
🎬 Watch Now: Feature Video
Published : Feb 21, 2024, 8:32 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை உள்ளது. இங்குள்ள மேட்டுக்கனியூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சக்தி அம்மன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் தட்டில் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாகச் சுற்றி சக்தி மாரியம்மன் கோயிலை வந்தடைந்ததும், 20 அடி உயரம் கொண்ட தேரை அனைவரும் சேர்ந்து இழுத்து ஓம்சக்தி பராசக்தி என கோசம் எழுப்பிச் சென்றனர்.
இந்த திருவிழாவில் பாரம்பரிய நிகழ்ச்சிகளான மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து கிராம மக்கள் அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்து வந்து பூஜை செய்து, ஆடு, கோழி ஆகியவற்றைப் பலியிட்டு வழிபாடு நடத்தினர்.
மேலும், குழந்தை இல்லாத தம்பதிகள் சாமி ஊர்வலத்தின் போது, தரையில் படுத்துக்கொண்டு வழிபாடு மேற்கொள்வர், அவர்களுக்கு அம்மன் கரகம் எடுத்து வரும் பூசாரிகள் பூவெடுத்து கொடுத்துக் குறி சொல்வர். அப்படிச் சொல்லும் பட்சத்தில் தங்களுக்குக் குழந்தை பெரும் பாக்கியம் கிடைக்கும் என்பது அக்கிராம மக்களின் ஐதீகமாக உள்ளது.