புத்தகத் திருவிழாவில் கவிதை பேசி அசத்திய சிறுவன்.. எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் பாராட்டு!
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: புத்தகத் திருவிழாவில் புத்தக வாசிப்பு குறித்து, கவிஞர் போன்று கவிதையாய் பேசி அசத்திய ஒன்பது வயது சிறுவனை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
புத்தக வாசிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அனைவரும் புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும் புத்தகத் திருவிழா, தமிழக அரசின் உத்தரவின் படி அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு முதல் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவாரூரில், இரண்டாவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், புத்தகத் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சி நேற்று (பிப்.11) நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.
புத்தகத் திருவிழாவின், ஒவ்வொரு நாளும் பாரம்பரிய நடனங்கள், பட்டிமன்றங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த தளபதி-திலகவதி தம்பதியினரின், மகன் தேவதீரன்(9), புத்தக வாசிப்பு குறித்து மேடையில் கவிஞர் போன்று கவிதையாய் பேசி அசத்தினான்.
தேவதீரனின் பேச்சைக் கண்டு ஆச்சரியமடைந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், அவனை அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். கடந்த வருடம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பற்றி தேவதீரன் கூறிய கவிதை வைரலானதையடுத்து, அவனை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.