கொடைக்கானல் அருகே களைகட்டிய குழந்தை வேலப்பர் கோயிலில் தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பழமை வாய்ந்த பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், திருத்தேரோட்ட பவனி விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான திருத்தேரோட்ட பவனி கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் குழந்தை வேலப்பர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வந்தார்.
இந்நிலையில் வாணவேடிக்கைகள், மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயில் சுற்றுச்சாலையில் திருத்தேரோட்ட பவனி நேற்று (பிப்.5) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'முருகனுக்கு அரோகரா..' கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மேலும், ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து குழந்தை வேலப்பர் கோயிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இந்த திருத்தேரோட்ட பவனியில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.