நெல்லையில் சிலம்பம் போட்டி: 77 நிமிடங்கள் தொடர்ந்து சுற்றி உலக சாதனை முயற்சி
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட திருநெல்வேலி மாவட்டத்தில், பாரம்பரியக் கலைகளை இன்றளவும் பயிற்றுவிக்கும் பயிற்சிக் கூடங்கள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், திருமலை சிலம்பம் விளையாட்டு கலைச் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 77 நிமிடங்கள் தொடர் சிலம்பம் மற்றும் வாள் சுற்றும் உலக சாதனை நிகழ்வு நேற்று (மார்ச் 3) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை திருமலை சிலம்பம் விளையாட்டு கலை சங்கம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு (All India Book of Records) இணைந்து நடத்தின. அதன்படி, 77 நிமிடங்கள் தொடர் சுழற்சி முறையில் வாள் மற்றும் சிலம்பம் சுற்றப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதனை திருமலை சிலம்பப் பள்ளியின் குரு மருத்துவர் சங்கரன் ஆசான், சாதனை நிகழ்வைத் தொடங்கி வைத்தார். மேலும், திருமலை சிலம்பப் பள்ளியில் சிலம்பம் பயின்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 602 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில், 200 மாணவர்கள் வாள்வீச்சு, 200 மாணவர்கள் இரட்டைக் கம்பம் வீச்சு, 100 மாணவர்கள் ஒற்றைக் கம்பு வீச்சு, 102 மூன்று கம்பம் சுற்றுபவர்கள் என இதில் கலந்துகொண்டு தொடர்ச்சியாகச் சிலம்பம் மற்றும் வாள் சுற்றி விளையாடினர். சுமார் 77 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று உலக சாதனை நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.