சித்திரைத் திருவிழா: காவடி எடுத்தவர்களுக்கு தண்ணீர் பீய்ச்சி கோடை வெப்பத்தைத் தணித்த இஸ்லாமியர்கள்..பேராவூரணியில் சுவாரஸ்யம் - Neelakanda Pillaiyar Festival - NEELAKANDA PILLAIYAR FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Apr 23, 2024, 8:12 AM IST
தஞ்சாவூர்: பேராவூரணியில் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 9 ஆம் நாளான நேற்று (திங்கட்கிழமை) பேராவூரணி மற்றும் 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள், பக்தர்கள், பால்குடம், மயில் காவடி, பறவை காவடி எனப் பல்வேறு காவடிகளை எடுத்தும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தொடர்ந்து, மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஆங்காங்கே பல்வேறு அமைப்புகளின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டும், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த திருவிழாவின் மூலம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பேராவூரணி இஸ்லாமிய நண்பர்கள் சார்பில், பழங்கள், குளிர்பானங்கள், மோர் பாக்கெட், தண்ணீர் பாட்டில் அடங்கிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைகள் பக்தர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும், காவடி எடுத்து வரும் இளைஞர்களுக்குப் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்ட மேடையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் குழாய் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பணி நடைபெற்றது.