வீரன் அழகுமுத்துக்கோனின் 314வது பிறந்த நாள் விழா; தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை! - Alagumuthukone 314th birthday
🎬 Watch Now: Feature Video
Published : Jul 11, 2024, 3:22 PM IST
தூத்துக்குடி: 1750ஆம் ஆண்டு நடந்த அனுமந்தகுடி போரில் வீரன் அழகுமுத்துக்கோனின் தந்தை மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். இதனை அடுத்து, முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டுவதை தடுத்து நிறுத்திய, சுதந்திரப் போராட்ட வீரரான வீரன் அழகுமுத்துகோனின் 314வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 11) கொண்டாடப்படுகிறது.
இதனை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் நினைவு மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மதிமுக, பாஜக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் என ஏராளமானோர் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், இந்த விழாவை ஒட்டி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.