மாற்றுத்திறனாளி மகனை பேருந்திலிருந்து இறக்கிவிட்டதால் தாய் ஆத்திரம்.. நடத்துநரைக் கண்டித்து சாலை மறியல்! - திருப்பத்தூர்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 12, 2024, 9:44 AM IST
திருப்பத்தூர்: விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், பரத் என்ற 14 வயது மனனும் (மாற்றுத்திறனாளி) உள்ளனர். இந்நிலையில், மகன் பரத்தை திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் விஷமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக, திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் அவரை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார், தாய் வெண்ணிலா.
ஆனால் தனியார் பேருந்தின் நடத்துநர், மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல், சிறுவனை கீழே இறக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வெண்ணிலா, மற்றொரு பஸ்சில் ஏறி விஷமங்கலம் பகுதிக்கு வந்துள்ளார். அதையடுத்து அங்குள்ள சாலையில் கற்களை வைத்து சாலையை மறித்து, கையில் பெட்ரோல் கேனுடன் நின்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து தகவலறித்து விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், பேருந்து நடந்துநர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என வெண்ணிலாவின் உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாகக் போலீசார் உறுதியளித்ததால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.