கந்த சஷ்டி விழா; பழனி முருகன் கோயிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 2, 2024, 4:39 PM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் புகழ்பெற்றது கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்தத் திருவிழாவையொட்டி, இன்று (நவம்பர் 2) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்பு, முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. கந்த சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையின் பொழுது, கந்த சஷ்டி திருவிழாவையொட்டி மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. அதன் பின்பு விநாயகர், மூலவர் முருகப்பெருமான், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், மயில் வேல் நவ வீரர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது.
மேலும், மலைக்கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் தங்களின் கைகளில் மஞ்சள் நிறக் கயிறை கட்டிக்கொண்டு, நேர்த்திக்கடனாக கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தனர். அரோகரா கோஷத்துடன் மஞ்சள் நிறத்தில் உள்ள கயிறைக் கட்டி, விரதம் இருக்க ஆரம்பித்தனர். திருவிழாவில் முக்கிய நாள் நிகழ்ச்சியாக, வரும் 7ஆம் தேதி, பழனி அடிவாரம் கிரி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
வரும் 8ஆம் தேதி பழனி முருகன் மலைக் கோயிலில், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகிறார். கந்த சஷ்டி திருவிழாவையொட்டியும், தொடர் விடுமுறை தினத்தையொட்டியும் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது.