காளி வேடமணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. சேலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட மயானக் கொள்ளை நிகழ்ச்சி! - சேலம் மயான கொள்ளை
🎬 Watch Now: Feature Video
Published : Mar 10, 2024, 4:32 PM IST
சேலம்: மகாசிவராத்திரிக்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில் மயானக் கொள்ளை விழா தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலத்தில் பல ஆண்டு காலமாக மயானக் கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (மார்ச் 10) மாசி அமாவாசையை முன்னிட்டு காக்கையன் சுடுகாட்டில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மயானக் கொள்ளைக்காக விரதம் இருந்த பக்தர்கள் காளி வேடமணிந்து வண்ணங்களை முகத்தில் பூசி, மயில் தோகையைக் கட்டி, நடனமாடியபடி சேலம் மாநகர் காக்கையன் சுடுகாடு நோக்கிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது சில பக்தர்கள் உயிருடன் உள்ள கோழிகளை வாயில் கடித்துக்கொண்டு ஓடி வரும் போது, சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்கள், சாலையின் நடுவே படுத்துக் கொண்டு தரிசித்தனர்.
பக்தர்களை அம்மன் தாண்டிச் சென்றால் நோய், பில்லி, பிணி என சகலமும் நீங்கும் என்பது ஐதீகம். பக்தர்களைத் தாண்டிச் சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள், சுடுகாட்டில் சூறை ஆடி விரதத்தை முடித்தனர். இந்த நிகழ்ச்சியைக் காண சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மயானக் கொள்ளை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
இது குறித்து பக்தர்கள், பல ஆண்டுகாலமாக இந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளதாகவும், அம்மன் வரும்போது படுத்துக்கொண்டால் தீராத நோய் நீங்கும் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர்.