ஹில்குரோவ் ரயில் நிலையத்தை சூறையாடிய காட்டு யானைக் கூட்டம்.. சுற்றுலாப் பயணிகள் பீதி! - Elephants attacked railway station
🎬 Watch Now: Feature Video
Published : May 22, 2024, 11:03 PM IST
நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரயில் நிலையத்தை முற்றிலும் சூறையாடிய காட்டு யானை கூட்டத்தினால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த மே 18ஆம் தேதி, ஹில்குரோவ் கல்லார் ரயில் நிலையம் இடையே, ராட்சத பாறைகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
ரயில் பாதை சீரானதைத் தொடர்ந்து, இன்று (மே 22) முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மீண்டு ரயில் இயக்கம் தொடங்கியது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில், ஹில் குரோவ் ரயில் நிலையத்தை 11 காட்டு யானைகள், கூட்டமாக வந்து முற்றுகையிட்டதை பார்த்து, இரவு நேர காவலாளி அலறி அடித்து ஓடி உயிர் தப்பியுள்ளார். பின்னர், இந்த காட்டு யானை கூட்டம், ரயில் நிலையத்திற்குள் புகுந்து அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது.
குடிநீர் குழாய்களையும் விட்டு வைக்காமல் உடைத்தெறிந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. இதனைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம், இப்பகுதியின் அருகிலேயே முகாமிட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் மலை ரயிலை பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். முதல் முறையாக ரயில் நிலையத்தையே சூறையாடிய காட்டு யானைக் கூட்டத்தால் மலை மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.