ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசி நடுரோட்டில் நடனமாடிய மதுப்பிரியர்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
🎬 Watch Now: Feature Video
திருச்சி: தமிழகத்தில் அரசு மதுபானக் கடை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் அரசு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவும், நேரம் கழித்தும் மது விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள மதுபானக் கடையில், அதிகாலை முதலே மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் குடிமகன் ஒருவர் போதையில் நடுரோட்டிலேயே சட்டையை கழற்றியும், விசில் அடித்தும், டான்ஸ் ஆடியும் உள்ளார்.
மேலும், தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களையும் தூக்கி வீசி, விசில் அடித்து ஆட்டம் போட்டுள்ளார். இதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அதிகாலையிலேயே குடித்துவிட்டு மற்றவர்களுக்கு இடையூறு செய்யும்படி நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.