தருமபுரி: கர்நாடகாவின் கிருஷ்ண ராஜ சாகர் அணை முழுவதும் நிரம்பியது. இதனால் உபரிநீர் முழுவதும் காவிரியில் திறந்துவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன தண்ணீர் வந்தது.
இதன் காரணமாக ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள வீடுகள் வரை தண்ணீர் அதிகரித்தது. மேலும் ஒகேனக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஒகேனக்கலில் மெயின் அருவிக்குச் செல்லும் பகுதியில் மரங்கள் முறிந்து குப்பை கூலமாகக் காட்சியளிக்கிறது. மேலும் அருவியின் அழகைச் சுற்றுலாப் பயணிகள் ரசிக்க அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்திற்கு செல்லும் வழியிலிருந்த இரும்பு படிக்கட்டுகள் உடைந்து சேதமாகியுள்ளது.
தற்போது கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
இருப்பினும் தமிழக எல்லைப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள காடுகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 19 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து விடாமல் பெய்த கனமழை காரணமாக இன்று 3 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து 22 ஆயிரம் கன அடியாக உள்ளது.
பரிசல் இயக்க அனுமதி: சுமார் 20 நாள்களுக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை முதல் ஒகேனக்கல் கோத்திக்கல் பாறை முதல் மணல் திட்டு வழியாக மட்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையறியாமல் ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதையும் படிங்க: வாலிபர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! வீடியோ வைரல்!