திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியம்பட்டு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் அரிசி,பருப்பு, பாமாயில், மற்றும் மண்ணெண்ணை, உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
மாதத்தில் 4 நாட்கள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்குவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நியாயவிலைக்கடை விற்பனையாளர் ரகு என்பவரைப் சிறைபிடித்தனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, "மாதத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுவதாகவும், காலை முதல் மாலை வரை நிற்கும் கிராம மக்களுக்கு வெறும் அரிசி மட்டுமே வழங்கப்படுவதாகவும் அந்த அரிசியும் தரம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர். எண்ணெய்,மாவு உள்ளிட்ட பொருட்கள் சிலருக்கு மட்டும் வழங்குவதாகவும் சில பேருக்கு அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும் 2 மாதங்களாக பருப்புகள் வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
கிராம மக்கள் அனைவரும் கூலி வேலை பார்ப்பதாகவும் பொருட்கள் ஒழுங்காக வந்தால் மட்டும் கடையை திறக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த மாதம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பொருட்கள் எதுவும் சரியாக வழங்கபடவில்லை" எனத் தெரிவித்தனர்."
மேலும் இதுகுறித்து குடிமை பொருள் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனிடம் கேட்டபோது, "திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கடந்த 4 மாதங்களாகவே ரேஷன் பொருட்கள் வரத்து குறைந்த அளவே உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னைக்கு இத்தனை திட்டமா? - சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!