சேலம்: தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தற்போது முதலே அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பிரபல நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி சந்திக்கும் முதல் தேர்தலாகும். முன்னதால கடந்த மாதம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் நிர்வாக அமைப்பை உருவாக்கவும், மக்களை சந்தித்து பேசவும் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு 5 மண்டல மாநாடு, 10 மாவட்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு கட்சியில் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞரணி என 30 அணிகளை உருவாக்கி 2 லட்சம் நிர்வாகிகளை நியமிக்கவும் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து அக்டோபரில் தவெக சார்பில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த அவர் முடிவு செய்துள்ளார். திருச்சி அல்லது மதுரையில் மாநாடு நடத்த முடிவு செய்து கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வந்த நிலையில், தற்போது சேலம் மாவட்டமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.
குறிப்பாக சேலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்ற கெஜ்ஜல் நாயக்கன்பட்டி இடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று முன்தினம் பார்வையிட்டார். மேலும் மாநாடு நடத்துவதற்கான வாய்ப்பு குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அவருடன் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தவெக கட்சி தொடங்கிய பின் நடத்தப்படும் முதல் மாநாடு என்பதோடு மட்டுமில்லாமல் அதில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்த பல அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய் அரசியல் வாழ்க்கையில் இந்த மாநாடு திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படும் நிலையில், சேலத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 14 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..சேலம் மாநகராட்சி புதிய ஆணையாளர் யார் தெரியுமா? - tn govt transfer from IAS officers