கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவு இளநிலை பொறியாளராக விமல்ராஜ் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு கோவை வ.உ.சி பூங்கா அலுவலகத்தில் நிர்வாக அலுவலகம் உள்ளது. மேலும், கோவை மாநகராட்சி சார்பில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடுவது பணி இவரது பணி.
இந்த நிலையில், விமல்ராஜ் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், நேற்று (செப்.10) லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார், வ.உ.சி பூங்காவில் உள்ள விமல்ராஜின் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் போது, விமல்ராஜின் லேப்டாப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது அலுவலகத்தை பூட்டி வைத்து, விமல்ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பறிமுதல் செய்த பணத்திற்கான முறையான ஆவணங்களை விமல்ராஜ் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, விமல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.