சென்னை: தமிழ்நாட்டில் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மாறாக NPS என்ற நோ பென்ஷன் திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது. இதுவரையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு பைசாகூட பென்ஷனாக வழங்கப்படவில்லை என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், இணை செயலாளர் ஜீவன் ஆகியோர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வரவேற்கிறது.
இத்திட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசின் பணிக்கு 1.1.2004க்கு முன்னர் பணியில் சேர்ந்தோருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தாமல் ஒரு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தினை உத்தரவாதப்படுத்துவதற்கான இலக்கினை நோக்கி சென்றிருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை.
அதோடு மட்டுமல்லாமல், இதுநாள்வரை குடும்ப ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக மறுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், இன்று அதற்கான திறவுகோலிற்கும் மத்திய அரசு வித்திட்டுள்ளது. 25 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியம், அதற்குக் குறைவான பணிக் காலத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்தவொரு வாக்குறுதியினையும் அளிக்காத பாஜக, மீண்டும் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு, ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றினை 1.4.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட கடுமையான இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ போராடியபோது களத்திற்கே வந்து திமுக ஆட்சி அமைந்த உடன் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது ஆட்சிப் பொறுப்பிலுள்ள திமுக அரசு 40 மாதங்கள் கடந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எள்ளவும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பழைய ஒய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறி வருகின்றனர். ஆனால் நடைமுறைப்படுத்த வில்லை. எனவே, இதனை வலியுறுத்தி அடுத்தக் கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
மத்திய அரசு தமிழ்நாடு அரசிற்கு தரவேண்டிய நிதியை தராமல் உள்ளதால் நிதி நெருக்கடியில் உள்ளது என்பது உண்மைதான். அதற்காக தமிழ்நாடு மத்திய அரசிற்கு எதிராக போராட்டத்தை அறிவித்தாலும், அதற்கு ஆதரவாக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமாக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. 4 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் ஆட்சி பொறுப்பேற்றது முதல் 68 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
மேலும் 75 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பிற்கு வரும்போது இருந்த காலிப் பணியிடங்கள் தேர்தலுக்கு முன்னரும், இருக்கும் பணியில் உள்ளவர்கள் தொடர்ந்து ஒய்வு பெற்று வரும்போதும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
குறிப்பாக இளைஞர்களுக்கும், 10ம் வகுப்பு வரையில் படித்தவர்களுக்கு வேலை வழங்கும் குரூப் டி பணியிடங்களான தூய்மை பணிகளும், பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்டவற்றில் தனியாருக்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
வேலை வாய்ப்புகள் இல்லாததால் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்தப் பின்னர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் காத்திருந்து பதிவு செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது. இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்யாமல் உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களை இளைஞர்கள் நம்பவில்லை. எனவே குரூப் டி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : படிப்புடன் பார்ட் டைமில் மூட்டை தூக்கும் மாணவன்.. வைரல் வீடியோவை பார்த்து ஓவர் நைட்டில் உதவி செய்த விஜய்! - vijay helps kovilpatti student