வேலூர்: அம்மிக்கல் கொத்தி தருவது போல் வந்து வீட்டை நோட்டமிட்டு ஜன்னலை உடைத்து நகையை திருடிச் சென்ற இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரனையில், வேலூரை அடுத்த பெருமுகை இந்திராநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது 38). இவர் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி கணவர், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அடையாம் தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
கோகுல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் நகை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் DSP திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. ஆய்வு செய்த சிசிடிவி காட்சியில் திருடு நடந்த வீட்டிற்கு அருகே ஒரு பெண்ணும், 2 ஆணும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து, அதில் பதிவாகியிருந்தவர்கள் செல்லும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், வேலூர் பெருமுகையில் இருந்து காஞ்சீபுரம் மேல்பாக்கம் வரை சுமார் 100 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்பாக்கம், பெத்தேரியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி வேளாங்கண்ணி (27) மற்றும் குப்பை கரிமேடு, சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த செல்வா (23) என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் தான் கோகுல் வீட்டில் நகையை திருடியதும் தெரியவந்தது.
இவர்கள் ஊர் ஊராக சென்று உரல், கிரைண்டர், அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் கொத்தும் தொழில் செய்பவர்கள். இருசக்கர வாகனத்தில் பல வீடுகளுக்கு சென்று அம்மிக்கல் கொத்தி வந்துள்ளனர். இதனால் அவர்களிடம் எப்போதும் உளி, சுத்தியல், இரும்பு ராடு தொழில் நிமித்தமாக வைத்திருப்பதும், சம்பவத்தன்று வேலூர் பெருமுகை வந்த போது, கோகுல் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து நோட்டமிட்டு தங்கள் தொழில் செய்யும் பொருட்களை பயன்படுத்தி ஜன்னலை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.
அதன் அடிப்படியில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் ஏழரை சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டுதலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சமபவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது அத்துமீறும் இலங்கை கடற்படையை கண்டித்து கோவையில் போராட்டம்! - Protest in Coimbatore