திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரவிந்த், சந்தீப் திவாகர் ஆகிய இளைஞர்கள், கடந்த 19ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அதே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் சென்றுள்ளனர்.
இது குறித்து அப்பெண்ணின் கணவர் மாதேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இளைஞர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மாதேஸ்வரன், அப்பெண் மற்றும் மாதேஸ்வரின் தாய், தந்தை மற்றும் இளைஞர்கள், திவாகர், சந்தீப் மற்றும் அரவிந்தன் ஆகிய 7 பேர் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பெண் இச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தீப், திவாகர், அரவிந்தன் ஆகியோரை நேற்று (ஏப்ரல் 20) நள்ளிரவு கைது செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், 3 இளைஞர்கள் பொய்யான புகாரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதாகவும், இளைஞர்களைத் தாக்கிய மற்றொரு தரப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, அம்பலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த (பொறுப்பு) ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், இருதரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடக்கம்! - Vallalar International Center