தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் முருகன் (37). இவர் நேற்று (மார்ச்.8) அச்சம் பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களை சங்கரன்கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வேனில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சங்கரன்கோவில் நகரப் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஓட்டுநர் முருகன் மது அருந்தி விட்டு விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் முருகனைத் தாக்கி உள்ளனர். அப்போது ஓட்டுநர் முருகன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஓட்டுநர் முருகனின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்து உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் நேற்றிரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஓட்டுநரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்களுக்கு என்ன தீர்வு? யுஜிசிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!