சேலம்: அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “அதிமுக பொதுச் செயலாளராக எப்போதுமே எடப்பாடி பழனிசாமி தான். அவரது தலைமையில் தான் கட்சி எப்போதுமே இயங்கும்.
2 கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்து மாபெரும் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். இன்றும், என்றும் எப்போதும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச் செயலாளர். அதில் எந்த மாற்றமும் இல்லை.
திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை. தமிழகத்தில் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. சட்டம் ஒழுங்கு சரிந்து விட்டது. மின் தட்டுப்பாட்டினை சீர் செய்யாமல் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது” என்றார்.
ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்கிறதா அல்லது வேலுமணி தலைமையில் செல்கிறதா என்ற அமைச்சர் ரகுபதியின் கருத்து குறித்த கேள்விக்கு, “அமைச்சர் ரகுபதியின் கருத்து அவரது கற்பனை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது" - அமைச்சர் ரகுபதி பேட்டி! - Savukku Shankar Case