ஈரோடு: ஈரோட்டில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் துரை சேவகன் தலைமையில் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு மாநகர மாவட்ட அலுவலகத்தில் இன்று (பிப்.20) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் மற்றும் ஈரோடு கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனர். வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனை அறிவுறுத்தப்பட்டு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் பேசினார். அப்போது, "திமுக ஆட்சி பொதுமக்கள் அன்றாடமாகப் பயன்படுத்தும் பால், மளிகைப் பொருட்கள் போன்றவைகளுக்கு விலையேற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, போன்ற வரிகளையும் ஏற்றி உள்ளனர்.
அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திமுக ஆட்சிக் காலத்தில் குடும்பம் நடத்த ஒரு மாதத்திற்குக் கூடுதலாகப் பத்தாயிரம் ரூபாய் செலவாகுகிறது. அதே போல் ஈரோட்டிற்கு இதுவரை எந்த ஒரு நல்ல விஷயங்களையும் திமுக ஆட்சியில் செய்து தரவில்லை. எனவே வருகின்ற காலத்தில் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்ட நடவடிக்கை பாயும்! - அதிமுக பிரமுகரின் அவதூறுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி