கிருஷ்ணகிரி: ஓசூரில் வெளிநாட்டு தொலைப்பேசி அழைப்புகளை, உள்நாட்டு தொலைப்பேசி அழைப்புகளாக இணையதள இணைப்பு வாயிலாகச் சட்டத்திற்குப் புறம்பாக மாற்றி ரூ.2.50 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் இரண்டு இளைஞர்கள் ஓசூர் மாநகரப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் மற்றும் ரூட்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக, ஓசூர் பேருந்து நிலையம் பின்புறமாக வாடகை அறையில் காளிகாம்பாள் எண்டர்பிரைசஸ் என்கிற மையத்தைக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடத்தி வந்துள்ளார்.
இங்கு அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடு உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளை, இன்டர்நெட் வாயிலாக அதிக நேரம் பேசக்கூடிய அளவிற்கு உள்நாட்டு அழைப்புகளாகச் சட்டத்திற்குப் புறம்பாக மாற்றி ரூ.2.50 கோடி அளவிற்குப் பணம் சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை சென்னையில் செயல்பட்டு வரும் தொலை தகவல் தொடர்பு பாதுகாப்பு இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் கண்காணித்து, நுண்ணறிவுபிரிவு துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், ஓசூரில் சட்டவிரோத தொழில்நுட்ப முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தொலைத்தொடர்புத் துறை அதிகாரி விஜய் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஓசூர் நகர ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மையத்தில் வேலை செய்து வந்த மென்பொறியாளர்களான சாகுல் அமீது(26), அருணாச்சலம்(24) ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த தொழில்நுட்ப முறைகேட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கம்ப்யூட்டர்கள், இரண்டு லேப்டாப்கள், செல்போன்கள், ரூட்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், இந்த முறைகேட்டில் தலைமறைவாக உள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவரை ஓசூர் நகர போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விடுதலையான பிறகும் நிறைவேறாத ஆசை.. தாய்மடி சேராமல் பிரிந்த சாந்தனின் உயிர்!