மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காரைமேடு பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் இ.மணிகண்டன் (31) மற்றும் நாங்கூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் வே.சார்லஸ் (27) ஆகிய இருவரும் தென்னலக்குடி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று (மே 6) பிற்பகல் மதுபானமான டின் பீரை வாங்கி அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் டின் பீரை அருந்திய சில மணி நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த அவரது நண்பர் அளக்குடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மற்ற நண்பர்கள் உதவியுடன் மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
தற்போது அங்கு மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து, சீர்காழி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, காவல் ஆய்வாளர் சிவக்குமார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
போலீசார் அளித்த முதற்கட்டத் தகவலின் படி, "அரசு மதுபான கடையில் வாங்கிய டின் பீர் கடந்த ஜனவரி மாதத்துடன் காலாவதி ஆனது தெரியவந்தது. காலாவதி ஆன மதுபானத்தைக் குடித்ததால்தான் மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினர்.
இதையும் படிங்க: நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!