கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதனால், இன்று வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்து மின் தடை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வால்பாறை அருகே சோலையார் இடது கரைபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, மண் சரிந்து வீட்டின் மேல் விழுந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருந்த பாட்டி ராஜேஸ்வரி மற்றும் பேத்தி ஜனன பிரியா(14) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பின்னர், மண்சரிவைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர். நிலச்சரிவில் இடர்களுக்கு இடையே சிக்கி இருந்த பாட்டி மற்றும் பேத்தி இருவரது உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை செய்த போலீசார், மண் சரிவு நள்ளிரவில் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தற்போது, கேரள மாநிலம், வயநாடு பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது வால்பாறையிலும் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை: முன்னதாக, கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டிருந்தார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் (ஜூலை 30) மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அறிவித்திருந்தார்.
வெள்ள அபாய எச்சரிக்கை: 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 119.70 அடியை எட்டியுள்ளதால், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,245 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதனால், 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,677 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகையால், ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஹவுரா - சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..