தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள குமந்தபுரத்தைச் சேர்ந்த மந்திரி என்பவரது 9 வயதான மகன் உஷாந்த்காந்த் இயற்கை உபாதையை கழித்து விட்டு கிணற்றின் அருகே சென்ற போது தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
அதைக் கண்ட உஷாந்த்காந்த்தின் தம்பி சம்பவத்தை வீட்டில் சென்று கூறியுள்ளார். இதனை அடுத்து, சிறுவனின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு சம்பவ இடத்திற்கு வந்து உஷாந்த்காந்தை தேடியபோது உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, சங்கரன்கோவில் அருகே உள்ள கரைகண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க முருகன் என்பவரது 8 வயதான மகள் கனிஷ்கா என்ற சிறுமி நேற்று (மே 27) இரவு வீட்டின் அருகே உள்ள பொதுக் கிணற்றின் மீது போடப்பட்ட வலையின் மீது ஏறியதாகவும், அப்போது இரும்பு வலை உடைந்து கிணற்றினுள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இரவு நேரம் என்பதால் கிணற்றினுள் விழுந்த சிறுமி கனிஷ்காவை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், வெகு நேரம் கழித்து கனிஷ்காவை காணவில்லை என அவரது பெற்றோர்கள் அனைவரும் தேடியுள்ளனர்.
அப்பொழுது, பொதுக் கிணற்றின் மீது போடப்பட்ட இரும்பு வலை உடைந்து கிணற்றின் உள்ளே விழுந்திருப்பதைக் கண்டு சந்தேகத்தின் அடிப்படையில் கிணற்றினுள் பார்த்ததாகவும், அந்த சமயத்தில் கிணற்றினுள் சிறுமி கனிஷ்கா விழுந்திருப்பதை கண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்குத் தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சிறுமி கனிஷ்காவை மீட்க கிணற்றினுள் இறங்கியபோது கனிஷ்கா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக கனிஷ்காவின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சேர்ந்தமரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கிணற்றில் விழுந்த இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் இரண்டு கிராம மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த பீடி இலைகள் - க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கியது எப்படி?