கோவை: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு நாளை (மே 30) வருகை புரிகிறார். அதே போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். மோடி மற்றும் அமித்ஷா வருகைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இருவரையும் கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்த அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி, அங்குள்ள பூரிஜெகநாதர் ஆலயத்தில் உள்ள பொக்கிஷங்கள் அடங்கிய அறைகளின் சாவி காணாமல் போயுள்ளது எனவும், அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்றும் அப்பட்டமாகத் தமிழ்நாட்டு மக்களின் மீது பழியை சுமத்தி வருகிறார். மேலும் தமிழர்கள் திருடர்கள், களவாணிகள் என்பது போல ஒடிசா மாநில மக்களின் மத்தியில் பேசியுள்ளார்.
ஒடிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் (VK Pandian IAS) அதிகாரி ஒடிசா முதலமைச்சர் பட்நாயக் உடன் இணைந்து பணியாற்றிய காரணத்தினால், பிரதமர் மோடி பாண்டியன் மீது பழி சுமத்துவது போல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் களவாணிகள், திருடர்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், வட மாநில மக்களை தமிழ்நாட்டில் கேவலமாக நடத்துகிறார்கள்; இழிவாகப் பேசுகிறார்கள் எனப் பொய்யான தகவலைப் பரப்பி, வடமாநில மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே பகையை உருவாக்குவது போல் தொடர்ந்து பேசி வருகிறார்.
அதுமட்டுமின்றி பிரதமர் மோடி தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் ஐஏஎஸ் ஒடிசாவின் முதலமைச்சர் ஆகலாமா? 'மண்ணின் மைந்தர்கள் தான் ஆக வேண்டும்' என்று சொல்லி தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் ஒடிசாவில் பணியாற்றக் கூடாது என்ற கருத்தை ஒடிசா மக்களின் இடையே பரப்பியதாக விமர்சித்தார். இவ்வாறு தமிழ்நாட்டு மக்களைத் திருடர்கள் என்றும், தமிழக மக்கள் மீது அபாண்டமாக பொய்யான தகவல்களை பரப்பியும், வட மாநில மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பகையை ஏற்படுத்துகின்ற முயற்சியை மோடியும் அமித்ஷாவும் செய்துள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டின் மீது இத்தனை வஞ்சகத்தை கக்கிவிட்டு, பொய் செய்திகளை பரப்பி தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்திவிட்டு, மே 30ஆம் தேதி மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார், அமித்ஷாவும் மதுரைக்கு வருகிறார். தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தி தமிழ்நாட்டு மக்களைத் திருடர்கள் என்றும் களவாணிகள் என்றும் கூறிய மோடி, அமித்ஷா தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது.
மேலும், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்காமல் தமிழ்நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று அனைத்து கட்சிகள் சார்பில் அவர்களை எச்சரித்து, மே 30ஆம் தேதி மதுரை கட்டபொம்மன் சிலையின் அருகில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.