தஞ்சாவூர்: தமிழகத்தில் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் சீரழிக்கும் வகையில் போதை கலாச்சாரம் பெருகி, ஆயிரக்கணக்காண விதவைகள் உருவாக காரணமாக அமைந்துள்ள சூழ்நிலையில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கு என்ற நோக்கிற்காகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆயிரக்கணக்காண இஸ்லாமியர்கள் இன்று கும்பகோணத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜகபர்அலி, மாவட்ட செயலாளர் முகமது பாரூக் மற்றும் மாவட்ட பொருளாளர் ஷாகுல் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் சிக்கந்தர் அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேரணியை கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது நாசர் தொடங்கி வைத்தார்.
மீன் அங்காடி பகுதியில் தொடங்கிய இப்பேரணி, ஹாஜியார் தெரு, ஆயிகுளம் சாலை, நாகேஸ்வரன் தெற்கு வீதி, உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பு, சாரங்கபாணி சன்னதி வழியாக காந்தி பூங்காவிற்கு வந்து நிறைவு பெற்றது. இந்த பேரணியில், மது மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆயிரக்கணக்காண இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது, “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, படிப்படியாக அரசு மதுபானக் கடைகள் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும். போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில், இரு ஆண்டுகள் மது இல்லாமல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றது என்ற வரலாறு உண்டு. அதனை பின்பற்றி, தற்போது தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கினை கொண்டு வரவேண்டும். மது இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழக்கூடியதே நல்லாட்சி. அத்தகைய நல்லாட்சியை வழங்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பழக்கடை வியாபாரி மீது தாக்குதல்.. ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி மகன் உட்பட 3 பேர் கைது! - Nungambakkam bar issue