சென்னை: தமிழக அரசு துறைகளில் குரூப் ஏ, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் ஏ, குரூப் 2ஏ பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. கொள்குறி வகையிலான இந்தத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7, 93,966 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளை நடத்தி வருகிறது.
தேர்வர்களின் நலன் கருதியும், தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தவும், 2024ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் முடிவுகள் 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில் விரைவாக வெளியிடப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- (தொகுதி | பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 33 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- (தொகுதி || மற்றும் IA
பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி IV)பணிகள்)-க்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப்பட்டுள்ளன' என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.