சென்னை: கார்த்திகை மாதம் மகா கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் கோயில் மூலவர் சன்னிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போகுவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாள் (13/12/2024) மற்றும் பௌர்ணமி (14/12/2024)-யை முன்னிட்டு 12/12/2024 முதல் 15/12/2024 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருகார்த்திகை தீபத்திருவிழா; கிரிவலப்பாதை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட காவல் துறை!
அவற்றின் விவரம் கீழ்வருமாறு;
தேதி | சென்னை - திருவண்ணாமலை பேருந்துகளின் எண்ணிக்கை | வேறு மாவடங்களிலிருந்து – திருவண்ணாமலை பேருந்துகளின் எண்ணிக்கை |
12/12/2024 | 269 | 948 |
13/12/2024 | 643 | 3689 |
14/12/2024 | 801 | 2543 |
15/12/2024 | 269 | 947 |
பேருந்துகளின் மொத்த எண்ணிக்கை | 1982 | 8127 |
தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் (up and down journey) முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்" தெரிவிக்கப்பட்டுள்ளது.