சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் சுமார் 4 லட்சத்து 26 ஆயிரத்து 821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் என மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா இன்று (மே 14) காலை வெளியிட்டார். இந்த தேர்வில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 மாணவிகளும், 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 மாணவர்களும் என மொத்தமாக 7 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டைவிட 0.24 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல மாணவர்களைவிட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவிகள் 94.69 சதவீதமும், மாணவர்கள் 87.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம், மாணவர்களைவிட மாணவிகள் 7.43 சதவீதம் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கணினி அறிவியலில் 99.39 சதவீதம் எடுத்து மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சியும், குறைந்தபட்சமாக தாவரவியலில் 91.88 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11ம் வகுப்பு மாணவர்கள் பாடவாரியாக தேர்ச்சி சதவீதம்:
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதம்:-
வ.எண் | பாடம் | தேர்ச்சி சதவீதம் |
1. | அறிவியல் பாடப் பிரிவுகள் | 94.31% |
2. | வணிகவியல் பாடப் பிரிவுகள் | 86.93% |
3. | கலைப் பிரிவுகள் | 72.89% |
4. | தொழிற்பாடப் பிரிவுகள் | 78.72% |
முக்கிய பாடங்களில் தேர்ச்சி சதவீதம்:-
வ.எண் | பாடம் | தேர்ச்சி சதவீதம் |
1. | இயற்பியல் | 97.23% |
2. | வேதியியல் | 96.20% |
3. | உயிரியல் | 98.25% |
4. | கணிதம் | 97.21% |
5. | தாவரவியல் | 91.88% |
6. | விலங்கியல் | 96.40% |
7. | கணினி அறிவியல் | 99.39% |
8. | வணிகவியல் | 92.45% |
9. | கணக்குப் பதிவியல் | 95.22% |
இதையும் படிங்க: +1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி..