திருவண்ணாமலை: அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொருவாரம் திங்கள் கிழமையும் குறைதீர் கூட்டம் நடைபெறும். அப்போது, ஏழை எளிய மக்களுக்கு மனு எழுதித் தர ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலர் அமர்ந்திருப்பர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மக்கள் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து அவர்கள் தேவையான மனுக்களை எழுதி பெற்றுக் கொள்வர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.12) நடைபெற்ற கூட்டத்திற்கு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவது வழக்கம்.
மேலும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் ஏழை எளிய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனுக்களை எழுதுபவர்களிடம் பணம் கொடுத்து தங்களது குறைகளை மனுவாக எழுதி வருவது வழக்கம். அதேபோல், இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்திற்கு ஒரு பெண் மனு அளிக்க வந்துள்ளார்.
இதையும் படிங்க: “போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகமே காரணம்” - மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீகாந்த்!
அப்போது, அப்பெண்ணிடம் இருந்து மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , இந்த மனு எழுதுவதற்கு எவ்வளவு பணம் தந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் 50 ரூபாய் கொடுத்து மனு எழுதி வந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியை அழைத்து, "ஆட்சியர் அலுவலகத்தில் எத்தனை துறை உள்ளதோ அந்த துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் குறைதீர்வு கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதித் தர வேண்டும்" என உத்தரவிட்டார்.
முன்னதாக, மனு அளிக்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரமாக கால்கடுக்க நின்றிருந்த நிலையை கண்டு, அவர்கள் அமர் வசதி வழிவகை செய்யும் படி வாரந்தோறும் 500 நாற்காலிகளை வரவழைத்து பொதுமக்களை அமர வைத்து மனுக்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில், தற்போது மனு அளிக்க வரும் பொது மக்களுக்கு அதிகாரிகளை வைத்து மனுக்களை எழுதிப் பெற செய்த நிகழ்வு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!