திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்த ஆனந்த் சேகர் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சோமாட்டோ (Zomato) செயலியில், அக்ஷயா பவன் என்ற உணவகத்தில் ஊத்தாப்பம், தோசை உட்பட 498 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார்.
இதனை அடுத்து, சோமாட்டோ நிறுவனத்தின் டெலிவரி ஊழியரும் உணவு பார்சலை கொண்டு வந்து கொடுத்துள்ளார். ஆனால், சாப்பிடுவதற்காக பார்சலை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்த மற்ற உணவுகள் இருந்த நிலையில் ஊத்தாப்பம் மற்றும் தோசை இல்லாமல் இருந்துள்ளது.
ஆசைப்பட்டு ஆர்டர் செய்த தோசையும், ஊத்தாப்பமும் கிடைக்காமல் போனதே என்ற ஆதங்கத்தில் ஆனந்த் சேகர் உடனடியாக சோமாட்டோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அவரிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் மேலும் ஆத்திரம் அடைந்த ஆனந்த் சேகர், திருவள்ளூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை அடுத்து, ஆனந்த் சேகர் தொடர்ந்த வழக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சோமாட்டோ நிறுவனம் தரப்பில், "உணவகத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இடைத்தரகர் போல் செயல்பட்டு, வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை சம்பந்தப்பட்ட ஹோட்டல் இருந்து வாங்கி கொடுப்பதோடு எங்கள் வேலை முடிந்து விடுகிறது.
மேலும், பார்சல் போட்டுத் தருவது ஹோட்டல் நிர்வாகம் தான். அதற்குள் இருக்கும் உணவுகளின் தரம் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் நாங்கள் சரிபார்க்க முடியாது. இந்த வழக்கில் ஹோட்டல் நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுப்பு தெரிவித்த திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி, வாடிக்கையாளரிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.73 வசூலித்து உள்ளீர்கள். எனவே, சேவை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை சரி செய்யும் பொறுப்பு சோமாட்டோ நிறுவனத்திற்கு உண்டு.
ஆகவே, மனுதாரரின் ஒப்பந்தம் சோமாட்டோ நிறுவனத்துடன் நேரடியாக இருக்கிறது. அதற்கான சேவை கட்டணத்தையும் மனுதாரர் வழங்கி இருக்கிறார். எனவே சோமாட்டோ நிறுவனம் தரப்பில் கூறுவது போல உணவகத்தை மற்றொரு தரப்பாக சேர்க்க இயலாது.
எனவே, மனுதாரர் உணவுக்காக செலவழித்த ரூ.498-ஐ சோமாட்டோ நிறுவனம் திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் வேதனைக்காக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தமாக ரூ.15 ஆயிரத்து 498-ஐ செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆன்லைன் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் கொலை..நெல்லையில் கடையடைப்பு !