திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், சிவராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் மு.வெற்றிக்கொண்டான். இவர் நகராட்சிக்கு உட்பட்ட 36வது வார்டு உறுப்பினராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு அவருக்குச் சொந்தமான இன்னோவா கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த காரின் முன்பக்கம் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து விட்டுச் சென்று உள்ளனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மண்டலச் செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
பின்னர், இது தொடர்பாக திருப்பத்தூர் நகர போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளரின் கார் கண்ணாடியை உடைத்தது அப்பகுதியில் சுற்றி வரும் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி என்பது தெரியவந்தது.
மேலும், அந்த மூதாட்டி அப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் விடுகளின் காலிங் பெல் அடிப்பது, கற்களை காட்டி மிரட்டுவது போன்ற செயல்களை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே, அந்த மூதாட்டியை காப்பகத்தில் அடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த மூதாட்டி செங்கல் கற்களுடன் தெருவைச் சுற்றி நடந்து சென்று கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: போலீசாருடன் விசிகவினர் வாக்குவாதம்.. தேனியில் நடந்தது என்ன?