திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட நகராட்சிக்குட்பட்ட 28வது வார்டு சேர்மன் துரைசாமி தெரு அருகே உள்ள திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி முக்கிய சாலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கால்வாய் கழிவு நீர் தடையின்றி வெளியேற புதியாக சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, அந்த பகுதியில் நகராட்சியின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் தெருக்குழாய் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆகையால், அதனை சரிசெய்ய சுமார் 4 அடி ஆழமுள்ள குழியை மட்டும் தோண்டி விட்டுச் சென்றவர்கள் மீண்டும் வரவே இல்ல எனவும், அதனால் அப்பகுதியில் கடந்த 5 மாதங்களாகத் தண்ணீர் வராமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி முக்கிய சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், பள்ளிப் பேருந்துகள் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது திறந்த வெளியில் இருக்கும் இந்த குழியினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், அசம்பாவிதம் ஏதுவும் நடப்பதற்கு முன்பாக, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து விபத்துக்களைத் தவிர்க்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்