திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் 5 நாட்களாக சரியாக குடிதண்ணீர் வர இல்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அலுவலகத்தின் அறையின் முகப்பில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களுடன் தரையில் அமர்ந்து மேயர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (டிச.10) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மேயர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாநகராட்சியின் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் (திமுக) தலைமையில் ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
மேலும், இவர்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த மேயர் ராமகிருஷ்ணன் மனு வாங்குவதை நிறுத்திவிட்டு, போராட்டம் நடக்கும் அறையின் முகப்புக்கு சென்றார்.
அப்போது போராட்டம் நடத்திய மக்கள் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்து அவரும் தரையில் அமர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மக்கள் அவர்களது குறையை மேயரிடம் கூறினர். பின், போரட்டத்திற்கு தலைமை வகித்த மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மற்றும் மக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “பாளையங்கோட்டை மண்டலம் 5-வது வார்டுக்கு உட்பட்ட திம்மராஜபுரம் பகுதியில் சுமார் 2,500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு சரியாக குடிதண்ணீர் வருவதில்லை. கடைசியாக கடந்த 5 நாட்களுக்கு முன்பு குடிதண்ணீர் வந்தது. அதன் பின்னர், இதுவரை குடிதண்ணீர் வரவில்லை.
இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் தெரு, ஆண்டாள் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, சப்பானி மாடன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்கள் தங்களது கைக் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும், அத்தியாவசிய தேவைகளுக்குகூட குடிதண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் மோட்டார் பழுதாகிவிட்டது என்ற ஒரே பதிலை தினமும் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக மேயர் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து கேட்டறிந்த மேயர், அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக இந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மக்கள் போரட்டத்தை கலைத்து அங்கிருந்து வெளியேறினர்.
இதையும் படிங்க: கார்த்திகை தீபத் திருவிழா: "திருவண்ணாமலையில் கொப்பரை தீபம் ஏற்றப்படும்"- சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உறுதி!
அப்போது, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுள் ஒருவரான ஜானகி கூறுகையில், “எங்களுக்கு மூன்று மாதங்களாக சரியாக குடிதண்ணீர் வருவதில்லை. எங்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையோ, 10 நாட்களுக்கு ஒருமுறையோ தான் தண்ணீர் வருகிறது. அதுவும், குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் இல்லை. சில சமயங்களில் நள்ளிரவில் அல்லது திடீரென அறிவிப்பின்றி குடிதண்ணீர் வரும். அப்போதும் சிறிது சிறிதாக தான் வரும்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக கொஞ்சம்கூட குடிதண்ணீர் வரவில்லை. அதனால் நாங்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளோம். இதுகுறித்து மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்” என்றார்.
துர்நாற்றம் வீசும் குடிநீர்: போராட்டத்தில் ஈடுபட்ட திம்மராஜபுரத்தை சேர்ந்த தேவசேனா கூறுகையில், "எங்கள் பகுதியில் குடிதண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. குடிதண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. அதை எதற்கும் பயன்படுத்த முடிவதில்லை. அதை கைகழுவதான் பயன்படுத்துவோம். அப்போதும், கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும், இல்லையென்றால் கையில் இருந்து துர்நாற்றம் வீசும்.
மேலும் எங்கள் பகுதியில் சாலை சுத்தமாக இருப்பதில்லை. பாதையில் சாணி, குப்பைகள் என அசுத்தமாக உள்ளது. ’ஸ்மார்ட் சிட்டி’ என்று கூறுகிறார்கள். ஆனால், எங்கள் பகுதி இன்றும் வெளி ாடாக, அசுத்தமாக இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி மேயரிடம் மனு அளித்துள்ளோம், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்” என்றார்.